திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). இவர் மீது கொலை, கொள்ளை, அடிதடி, கூலிப்படையாக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த மே 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடிய போது இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் அனைவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் திருச்சி சமயபுரம் அருகே ரவுடி ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.