2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பையடுத்து, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசா்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் : ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை. அதேசமயம், கடைசி நேரத்தில் சென்று அவசராவசரமாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.
திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 85 சதவீதம் வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தியதன் மூலமாகவும், 15 சதவீத நோட்டுகள் சில்லறை மாற்றியது மூலமாகவும் வங்கிகளுக்கு வந்தடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.