உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 18 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.இந்நிலையில், உக்ரைனில் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷ்யா திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இக்கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர், 33 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் வந்துள்ள நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் கூடுதலாக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, போர் தளவாடங்கள் வாங்க உக்ரைனுக்கு மேலும் 8,322 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.