விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோர் நடிப்பில், ஜான் மகேந்திரன் இயக்கத்தில், கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில், விஜயின் குட்டி குட்டி குறும்பான செயல்களை ரசிகர்கள் ரசித்து வரும் வேளையில், படத்தில் இடம்பெற்ற துணை கதாபாத்திரமான, ஜெனிலியாவின் தோழியாக வரும் நடிகையையும், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும், அவரது வீடியோக்களையும் தனியாக வெட்டி, அவரது ஸ்கீரின் பிரசென்சை பாராட்டி வருகிறார்கள். இன்னும் சிலர், அந்த துணை நடிகை யார் என்று, சமூக வலைதளங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
20 வருடங்களுக்கு பிறகு, தனக்கு கிடைக்கும் ஆதரவுகளை பார்த்த அந்த துணை நடிகை, சமூக வலைதளப் பக்கத்தில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடைய பெயர் ராஷ்மி எனவும், சச்சின் படத்தில் நடிக்கும்போது, தனக்கு 20 வயது எனவும், தற்போது திருமணமாகி, வெளிநாட்டில் செட்டில் ஆகி இருப்பதாகவும், அங்கு தொழில் முனைவோராக இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்கள் தனக்கு அளித்துள்ள இந்த அங்கீகாரம் எதிர்பாராத ஒன்று எனவும், இது என் மனதை தொடும் வகையில் உள்ளது எனவும், அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.