பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் பிரிஜ் பூஷன் சிங், இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்தார். அப்போது, இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டையடுத்து, மல்யுத்த வீரர் – வீராங்கனைகளான, ஷாக்ஷி மாலிக் ( ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி பிரிவில், பதக்கம் வாங்கிய ஒரே பெண் ) , வினேஷ் போகட் ( உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றவர் ) , பஜ்ரங் புனியா ( டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ) ஆகியோர், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் வரை கவனம் பெற்றது. இவ்வாறு இருக்க, இந்த மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்த ஷாக்ஷி மாலிக்கிற்கு, தற்போது மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதாவது, டைம்ஸ் நாளிதழல் ஒவ்வொரு வருடமும், மிகுந்த செல்வாக்கு 100 பேரின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும், அந்த பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், தற்போது ஷாக்ஷி மாலிக்கும் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த அவர், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டைம்ஸ் 100 லிஸ்டில் இடம்பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் தங்களது பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.