சல்மான் கான் டூப் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமாவில் எடுக்கப்படும் பல்வேறு அபாயம் நிறைந்த காட்சிகளில், நிஜ நடிகர்கள் நடிக்காமல், அதே போன்ற தோற்றம் உடைய நடிகர்களை வைத்து, அந்த காட்சியை எடுப்பார்கள். இவ்வாறு, நடிகர் சல்மான் கானின் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், அவருக்கு டூப்பாக நடித்தவர் தான் சாகர் பாண்டே.

இவர், நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சக உடற்பயிற்சியாளர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக சாகர் பாண்டே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல், பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சல்மான் கான் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டு அதோடு பஜ்ரங்கி பைஜான் படப்பிடிப்பில் சாகர் பாண்டேயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுதவிர நடிகர் அனுபம் கெர், நடிகை சங்கீதா பிஜ்லானி உட்பட பலரும் சமூக வலைதளத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.