மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் வெளிப்புறத்தில், அடையாளம் தெரியாத இரண்டு பேர், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, காலை 4.51 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மல் பிஷ்னோய், தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நான் தான் காரணம் என்றும், இது வெறும் டிரைலர் தான் என்றும் எச்சரித்திருந்தார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், அனுஜ் தபன் உட்பட 4 பேரை காவல்துறையினர், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று கைது செய்தனர். இதையடுத்து, ஏப்ரல் 30-ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் விசாரணை நடத்துவதற்கு, நீதிமன்றம் அனுமதித்து இருந்தது.
இதற்கிடையே, கடந்த மே 1-ஆம் தேதி அன்று, அனுஜ் தபன், தற்கொலை செய்துக் கொண்டதாக, காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது அனுஜ் தபனின் தாய் ரீடா தேவி, மும்பை உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னுடைய மகன் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை என்றும், காவல்துறையினரின் 3-ஆம் ரக சித்ரவாதையால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கை, சி.பி.ஐ மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஏப்ரல் 24-ஆம் தேதியில் இருந்து மே 2-ஆம் தேதி வரை பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தனது மகனின் உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் அந்த ஆயவில் குறிப்பிட்டுள்ளார்.
அனுஜ் தபன் தற்கொலை செய்துக் கொண்டார் என்று காவல்துறையினர் அறிவித்திருந்த நிலையில், அவரது தாய் ரீடா தேவி இவ்வாறு மனு தாக்கல் செய்திருப்பது, இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.