மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிரடியாக அறிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளோம். இது பெண்கள் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, கோடிக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கும்” என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை மனதில் வைத்தே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக மகளிர் தினம் வருகிறதா என்ற அவர், “கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 முறை எரிகாற்று உருளையின் விலையை 45% உயர்த்திவிட்டு, இந்த ஆண்டு மட்டும் குறைப்பதற்கு காரணம் மகளிர் நாள் வருவதனாலா? இந்த ஆண்டு தேர்தல் நாள் வருவதனாலா?” என்றும் காட்டமாக கேள்விகளை முன்வைத்து உள்ளார்.