தீண்டாமையும் சாதி பாகுபாடும் பார்ப்பது சனாதன தர்மம் அல்ல என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
ஆளுநர் மாளிகை சார்பில் வள்ளலாரின் 202-வது வருவிக்கவுற்ற பெருவிழா மற்றும் திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா நேற்று (அக்.5) நடைபெற்றது.
இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: எப்போதெல்லாம் தர்மம்தாழ்ந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தெய்வம் மனிதனாக அவதரித்து நிலைமையை சரிசெய்கிறது என்பதுதான் நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் நம் நாடு மிகவும் கடினமான சூழலில் இருந்துபோது அவதரித்த தெய்வம்தான் வள்ளலார்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் ஞானத்தால் வெளிப்படுத்தியவர்கள் ரிஷிகள். இந்த உண்மையை வெவ்வேறு மொழி பேசிய, வெவ்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்ட, வெவ்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றிய மக்கள் உணர்ந்துகொண்டனர். இந்த உண்மையில் இருந்து தோன்றியதுதான் பாரதம்.
இவ்வாறுதான் பாரத நாடு உருவானது. யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை. அதேபோல், யாரும் யாரை விடவும் தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும்சமம் என்று பழமையான வேதமான ரிக் வேதம் கூறுகிறது.
அனைவரும் ஒன்று என்பதுதான் பாரத தர்மம். இதைத்தான் சனாதன தர்மம் என்று சொல்கிறோம். ஆனால், சிலர் சனாதன தர்மம் என்பது சாதி பாகுபாடு என்று கூற முயற்சிக்கிறார்கள். ஆனால், உண்மையில் சனாதன தர்மம் என்பது சாதி பார்ப்பது அல்ல. யாராவது சாதி பாகுபாடு பார்த்தால் அது சனாதன தர்மம் அல்ல.
சனாதன தர்மம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. அனைவரும் ஒரே குடும்பம் என்று வலியுறுத்துவது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் ஒரே குடும்பம் என்றுகருதுவதுதான் சனாதர்ம தர்மம்.சனாதன தர்மம் எந்த பாகுபாட்டையும் ஏற்றுக்கொள்ளாது. தீண்டாமையும் சாதி பாகுபாடும் பார்ப்பது சனாதன தர்மம் அல்ல.
காலப்போக்கில் மனித பலவீனங்களாலும், உட்பிரச்சினைகளாலும் சிலநேரங்களில் வெளியில் வந்த அச்சுறுத்தல்களாலும் சனாதன தர்மம் தடம் மாறியிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் தெய்வம் மனிதனாகப் பிறந்து நிலைமையை சரிசெய்கிறது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலாபேசும்போது, “பசியைப் பற்றி உலகம் பேசியிருக்கலாம். ஆனால்,பசியை தீர்ப்பதற்கான தீர்வுகளைச் சொன்னவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே” என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் பழ.கருப்பையா பேசும்போது, “சாதிகளையும் சடங்குகளையும் புறந்தள்ளியவர் வள்ளலார்” என்றார்.