தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்த விஜய், அந்த கட்சியை வலிமையாக்கும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக, மாநாடு நடத்துதல், முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தல், உள்கட்டமைப்பை திடமாக உருவாக்குதல் என்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு இருக்க, நேற்றும், நேற்று முன்தினமும், விஜயை, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். 2026 தேர்தல் தொடர்பாக, பல்வேறு விஷயங்களை இருவரும் பேசியதாகவும் கூறப்பட்டது. மேலும், ஒரு வீட்டில் இருந்து ஒரு வாக்கு என்ற அடிப்படையில், புதிய யுக்தியை அவர்கள் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், “பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்” என்றும், “பணக்கொழுப்பு இருப்பவர்களுக்குத் தான், இதுபோன்ற வியூகங்கள் எல்லாம் தேவைப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னிடம் காசு கிடையாது. ஆனால் மூளை உள்ளது” என்றும், மறைமுகமாக விஜயை அவர் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய சீமான், “எதை செய்தால் சரியாக இருக்கும் என்பதை அறியாமல், அரசியலில் எப்படி இருக்க முடியும்” என்றும் கேள்வி எழுப்பினார்.