அனைத்து துறைகளிலும் நல்ல வளர்ந்துவிட்ட மாநிலமாக தமிழகம் இருந்தபோதிலும், சில விஷயங்களில் மட்டும் இன்னும் குறை கூறப்பட்டு வருகிறது. அதாவது, தமிழகத்தில் உள்ள மக்கள் மதுவை அதிகம் பயன்படுத்தக் கூடிய மாநிலமாக உள்ளது என்றும், சினிமா மோகம் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது என்றும் விமர்சனம் இருந்து வருகிறது.
ராமதாஸ், தொல்.திருமாவளவன் போன்ற அரசியல் கட்சி தலைவர்களே, பல மேடைகளில் இதுகுறித்து பேசியுள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள பந்தலூர் கடை வீதியில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பொங்கல் தினத்தில் மட்டும் ரூபாய் 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.. தீபாவளிக்கு 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. மதுவுக்காக மட்டுமே ஒரு நாளைக்கு இத்தனை கோடியை பயன்படுத்தும் மக்களுக்கு, எதற்கு இலவசம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு திரைப்படம் வெளியானால், ஒரு வாரத்திற்குள் 250 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறது. சாதாரண திரைப்படத்திற்கு பணத்தை கொட்டிக் கொடுக்கும் மக்களுக்கு, எதற்கு இலவசம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மது விற்பனையில் மட்டும் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் வசூல் ஆகிறது என்று குறிப்பிட்ட சீமான், இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார். அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு தேர்தல் வர உள்ளது.. அந்த தேர்தலையாவது மாறுதலுக்கான தேர்தலாக நினைத்து, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டார்.