தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, Y பிரிவு பாதுகாப்பை, மத்திய அரசு வழங்கியிருந்தது. இது, விஜயின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நடத்தப்பட்ட காரியம் என்று எதிர்கட்சியினர் சிலரும், விஜயின் உயிரைக் காப்பதற்காக செய்யப்பட்ட நடவடிக்கை இது என்று அண்ணாமலையும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவை இல்லை” என்றும், “நான் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு” என்றும் தெரிவித்தார்.
மேலும், “வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தல்கள் மாறியுள்ளது” என்றும் கூறினார். இதையடுத்து, பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்தக் கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சீமான், “ஆதாயம் இருக்கிறது என்றால், அனைவரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள்” என்றும், “அனைவரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள் என்று தான் நானும் கூறுகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.