பெண்கள் பற்றி பெரியார் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு, பெரும் சர்ச்சையை அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சீமான் புதுச்சேரியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது பேசிய அவரிடம், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதா? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சீமான், பெரியாரின் புத்தகத்தை நாட்டுடமையாக்குங்கள். அதில் உள்ளது ஆதாரம் என்று தெரிவித்தார்.
மேலும், அம்பேத்கரையும், பெரியாரையும் சமமாக பேசுவது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இவரது இந்த பேட்டியும், சமூக வலைதள பதிவும், பெரியார் ஆதரவாளர்கள், திமுகவினர், திகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டையும், திகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில், திமுகவின் அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர், சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை, சீமானின் பேச்சுக்கு, தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள அண்ணாமலை, “பெரியார் விவகாரம் தொடர்பாக சீமானுக்கு ஆதரவான ஆதாரங்களை நாங்கள் தருகிறோம். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை தற்போது பேசினால் அருவருப்பு ஏற்படும். அவர் பேசியதை பொதுவெளியில் பேசினால் தவறாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்வேறு தரப்புகளில் இருந்து, எதிர்ப்பும், ஆதரவும், சீமானுக்கு குவிந்து வருகிறது.