பணத்திற்காக 5 மாத குழந்தை விற்பனை – 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 மாத பெண் குழந்தையை நேற்று சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையங்கோட்டை மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலின் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் 5 மாத பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் தூத்துக்குடி டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த சித்திரைவேல் மகன் மாரியப்பன் (44), மேற்படி குழந்தையின் தாயான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கலைவாணர் என்பவரது மனைவி மாரீஸ்வரி (22), இவரது தாயார் சிவசங்கர் மனைவி அய்யம்மாள் (40) மற்றும் தூத்துக்குடி 3வது மைல் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி சூரியம்மா (எ) சூரம்மா (75) ஆகியோர் என்பதும் இவர்கள் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு தூத்துக்குடியிலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News