பரத் பாலாஜி என்ற நகைச்சுவை கலைஞர், முன்னாள் பிரதமர் நேரு குறித்து பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது.
கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.