சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது : அதிமுகவிலிருந்து சென்று திமுக அமைச்சராக இருக்கும் நபர் பல ஊழல்களை செய்துள்ளார் என பலமுறை கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள். இப்போது அமலாக்கதுறை மற்றும் வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பாரா என்பதை தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும். என்னை பொருத்தவரை ஒரு அமைச்சர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகள் எழும் பட்சத்தில் தார்மீக பொறுப்பு ஏற்று அவர் அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நான் கரூர் நாடாளுமன்றத்தில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவன். அப்பொழுதே மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளேன். அப்போது செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அதிமுகவை பொருத்தவரை திமுகவில் ஏற்படும் இதுபோன்ற ஊழல்களை ஆளும் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவர்களை பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்.
மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகளில் லஞ்சம் வாங்குவதும் மின்சார கட்டணம் உயர்வதும் கள்ளச்சாராயம் விற்பனையில் பல பேர் இறந்தது இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பொழுது மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.
இது போன்ற நடிப்புகள் எல்லாம் மக்கள் அனைவருக்கும் தெரியும். நடிப்பின் சக்கரவர்த்தியாக இருப்பவர் செந்தில் பாலாஜி அவரை போய் இன்னொரு நடிப்பின் சக்கரவர்த்தி பார்த்துள்ளார் என கூறினார்.