உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, சமீபத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதனை, ஏக்நாத் ஷிண்டேவும், பாஜக தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள அசாத் மைதான் பகுதியில், தசரா விழாவையொட்டி, கடந்த செவ்வாய் கிழமை அன்று, பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்துக் கொண்ட மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உத்தவ் தாக்கரே தலைமையிலான ஷிவ சேனா கட்சி, தங்களது சுயலாபத்திற்காக, ஹமாஸ் அமைப்பினருடன் கூட, கூட்டணி வைக்கும் என்று கூறியிருந்தார்.
இவரது இந்த விமர்சனத்திற்கு, தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்படும் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, “ஏக்நாத் ஷிண்டே பற்றி என்னால் பல விஷயங்களை சொல்ல முடியும். இந்த நாட்டை பற்றியும், நாட்டு மக்களையும் பற்றி தான் உத்தவ் தாக்கரே பேசுவார்.
ஆனால், பாஜகவை வலிமைப்படுத்தவும், மோடியை வலிமைப்படுத்தவும், ஜே.பி.நட்டாவை வலிமைப்படுத்தவும் தான், இந்த ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சு உள்ளது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தசரா என்பது ஒரு மங்களகரமான நாள். அந்த நாளில், மங்களகரமான விஷயங்களை பற்றி தான் பேச வேண்டும். ஆனால், ஷிண்டே இப்படி பேசியுள்ளார்.
அவர் தான் ஹமாஸ். மகாராஷ்டிரா மாநிலத்தின் லக்ஷர் ஹி தொய்பா தான் ஷிண்டே. ஷிவ சேனா தான் ஷிண்டேவை அரசியலில் பெற்றெடுத்தது. அந்த கட்சி தான், அவரை தற்போது முதலமைச்சர் பதவி வரை எடுத்து சென்றிருக்கிறது” என்று ராவத் கூறினார்.