திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேதாஜி நகரைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன், கல்பனா. இவர்களுக்கு பவுன் குமார் என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் பவுனுக்கு நேற்று அரையாண்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பவுன் குமார் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பள்ளிக்குச் செல்ல மறுத்த பவுன், வீட்டின் படுக்கையறையிற்குள் சென்று, கதவை தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், பவுனின் பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பவுன் குமார் மின் விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பவுன் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.