மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமண வாழ்க்கை சுமூகமாக அமையாமல் தவித்த அந்த பெண், குடும்ப வன்முறையில் சிக்கி, பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண், விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கணவர், மாமனார், மாமியார், கணவரின் சகோதரர் ஆகியோர் சேர்ந்து, என்னுடைய மாதவிடாய் ரத்தத்தை கேட்டனர். ஆனால், நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன்.
இருப்பினும், என்னுடைய மாதவிடாய் ரத்தத்தை எடுத்துச் சென்றுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
மேலும், 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக, தன்னிடம் மாதவிடாய் ரத்தத்தை கேட்கின்றனர் என்றும், அகோரிகளின் பூஜைக்காக இந்த ரத்தம் தேவைப்படுவதால், தன்னை கட்டாயப்படுத்துகின்றனர் என்றும், அந்த புகாரில் அப்பெண் கூறியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த 21-ஆம் நூற்றாண்டிலும், மூடநம்பிக்கைகளின் காரணமாக, பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவது, கசப்பான உண்மையாக பார்க்கப்படுகிறது…