கடந்த மே 5-ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.
நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன் (மே. 4) பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு 25 மாணவர்களை, இடைத்தரகர்கள் அழைத்து நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இதில் ஒரு மாணவர், சமூக வலைதளம் வாயிலாக சக நண்பர்களுக்கு வினாத் தாளை அனுப்பினார். அவர்களுக்கு பலருக்கு வினாத்தாளை பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து பாட்னா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக பாட்னாவில் உள்ள குறிப்பிட்ட விடுதிக்கு மே 4-ம் தேதி மதியம் 2 மணிக்கு போலீசார் சென்றனர்.
போலீசாரை பார்த்த இடைத்தரகர்கள் அதிர்ச்சி அடைந்து மாணவர்களிடம் இருந்த வினாத்தாள்களை பறித்து தீயிட்டு எரித்து அங்கிருந்து தப்பியோடினர்.
போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த மே 5-ம் தேதி பாட்னாவில் ஒரு காரில் சுற்றித் திரிந்த இடைத்தரகர்கள் சிக்கந்தர் யாதவ், அகிலேஷ் குமார், பிட்டு சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வு நடைபெற்ற பிறகு சில மாணவர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களில் மாணவர் அனுராக் யாதவ் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
எனது உறவினர் சிக்கந்தர் யாதவ் (இடைத்தரகர்), பாட்னா அருகேயுள்ள தானாபூர் நகராட்சியில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக அவர் என்னிடம் வினாத்தாளை அளித்து விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தினார். எனது உறவினர் சிக்கந்தர் யாதவும் அவரது நண்பர்களும் ஒரு வினாத்தாளை ரூ.32 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பல்வேறு மாணவர்களுக்கு விற்பனை செய்தனர்.