Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு

சினிமா

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் நடிகை விஜயலட்சுமி ஆந்திராவில் உள்ள ஏலூரு என்ற ஊரில் டிசம்பர் 02, 1960 ம் ஆண்டு பிறந்தார்.

குடும்ப வறுமை காரணமாக தன்னுடைய பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். இவருடைய வசீகரத் தோற்றத்தினால் இளமை பருவத்தில் பலருடைய தொல்லைக்கு ஆளானார்.

இதன் காரணமாக சில்க் ஸ்மிதாவின் பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக சென்னைக்கு வந்த அவர் உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.

1980ம் ஆண்டு வெளியான ‘வண்டிச்சக்கரம்’ திரைப்படத்தில் ‘சிலுக்கு’ என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். அதன் பிறகு அவர் ‘சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் பிரபலமடைந்தார்.

‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டார். மேலும் ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் அடியெடுத்து வைத்து 4 ஆண்டுகளிலேயே 200 படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.

சில்க்ஸ்மிதாவின் வாழ்வில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் நிறைந்துள்ளன. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற விழாவில் பங்கேற்க மறுத்தது, நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது எழுந்து நிற்க மறுத்தது போன்ற சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

பண்ணையார்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மக்களுக்கு நிதியாக சில்க்ஸ்மிதா தான் சம்பாதித்த பணத்தை வழங்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா 1996ல் சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவருடைய உடலை பெற்றுக்கொள்ள யாரும் இல்லாததால் மருத்துவமனையில் ஆளில்லாத அனாதைப் பிணமாக வைக்கப்பட்டிருந்தார். தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் சுமிதாவின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

இவரது மறைவுக்கு கடன் பிரச்சனை, காதல் தோல்வி என பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவரை சரியான காரணங்கள் வெளியாகவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதா, மரணத்தின்போதும் மர்மங்களுடனே மண்ணுலகை விட்டு மறைந்தார்.

மறைந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் சில்க் ஸ்மிதா என்ற பெயர் இன்றும் பல திரை ரசிகர்களுக்கு நினைவில் நீங்காத பெயராக உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top