“நீங்களே CM-ஆ இருக்கணும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுமி எழுதிய கடிதம் வைரல்!

தென்காசி மாவட்டம் திப்பணம் பட்டி அருகே உள்ள வினைதீர்த்த நாடார் பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு வகுப்பறைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த பள்ளியை சேர்ந்த 3-ஆம் வகுப்பு மாணவி ஆராதனா, முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதம் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அந்த பள்ளிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை அறிந்த மாணவி ஆராதனா, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “மதிப்பிற்குரிய ஐயா.. நான் அனுப்புன மனுவை ஏற்றுக்கொண்டு, எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே பள்ளியில் படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு சொன்னீங்க ஐயா.. நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா..

அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும் ஐயா. எங்க அம்மா, அப்பா, ஊர் மக்கள், என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோச பட்டாங்க ஐயா. உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமியின் இந்த கடிதம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.