நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சமகவை திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், விரக்தியில் சென்று பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் சரத்குமார்.
இந்நிலையில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த சரத்குமார், தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைத்ததாக அறிவித்தார். இதனால் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கி வந்த சமக கட்சி ஒன்றும் இல்லாமல் போனதால் அவரது கட்சித் தொண்டர்களை மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இன்று கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது சமக தொண்டர் ஒருவர் திடீரென மேடையில் ஏறினார். பின்னர் மைக்கை கையில் எடுத்த அவர், “என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க.. பாஜகவில் கட்சியை இணைப்பதற்காகவா இத்தனை ஆண்டுகள் நாங்கள் உழைத்தோம். இப்படி ஏமாத்திட்டீங்களே எங்களை. இனி இந்தக் கட்சித் துண்டு எதுக்குடா..? நீங்களே வெச்சிக்கோங்க. என ஆவேசமாக பேசினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற தொண்டர்கள், அவரை வலுக்கட்டாயமாக மேடையில் இருந்து கீழே இறக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.