ஓசூர் அருகே, கோழி பண்ணைக்குள் புகுந்த நல்ல பாம்பை, அப்பகுதி பொதுமக்கள் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உளியலாம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், அப்பகுதியில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று தன்னுடைய கோழிப் பண்ணையில், வழக்கத்திற்கு மாறாக, கோழிகள் அதிகம் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கோழிகளுக்கு இடையே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, 6 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று, கோழி முட்டைகளை விழுங்கிக் கொண்டு, நகர முடியாமல், கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டார்.