ராணிப்பேட்டை அருகே, மாட்டு தொழுவமாக ஆட்சியர் அலுவலகம் காட்சி அளித்ததால், அதனை சுற்றி, தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில், ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை சுற்றிலும், போதிய அளவில் பாதுகாப்பு வேலி இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சாலையில் உள்ள மாடுகள், அலுவலகத்தின் உள்ளே நுழைந்து சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், போதிய அளவில் பாதுகாப்பு பணியாளர்கள் இல்லாததால், ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நேற்று கூட்டமாக நுழைந்த மாடுகள், அங்கிருந்த புற்களை மேய்ந்துள்ளன.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள், ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும், பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியாளர்கள் விடுமுறை நாட்களிலும், பணியில் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.