பிரதமர் மோடிக்கு பஹாடி உள்பட பல மொழிகள் தெரியும், சோனியா காந்தி போல் ஹிந்தி தெரியாத இத்தாலியர் அல்ல என்று ஹிமாசல பிரதேச மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்தார்.
ஹிமாசல பிரதேசம் குலு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடிக்கு பஹாடி உள்பட பல மொழிகள் தெரியும். சோனியா காந்தி போல் ஹிந்தி தெரியாத இத்தாலியர் அல்ல. அவர் இந்த மண்ணின் மகன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டு வருகிறார்.
மண்டி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கின் தந்தை 6 முறை ஹிமாசல முதல்வராக இருந்தவர். நீண்டகாலமாக அவரது குடும்பம் அதிகாரத்தில் ஒட்டியுள்ளது. ஆனால், மோடி தேநீர் விற்பனையாளராக இருந்தவர், ஹிமாசலத்தின் முன்னாள் பாஜக முதல்வர் ஜெய் ராம் தாக்குர் கொத்தனாரின் மகன்.
ஒரு புறம் மோடியின் நல்லாட்சி மற்றொருபுறம் காங்கிரஸின் ஊழல் ஆட்சி இதில் பாஜகவின் நல்லாட்சிக்கு ஜூன் 1-ஆம் தேதி வாக்களிக்க ஹிமாசல மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என அவர் தெரிவித்தார்.