காட்டில் இருந்து சமவெளி பகுதிக்கு மனிதன் இடம்பெயரத் தொடங்கியது முதல் கான்கிரிட் வீடுகள் கட்டி வசிக்கும் தற்போதைய நாள் வரை, நாய்கள் மனிதன் கூடவே பயணித்து வருகிறது. இந்த நாய்கள், சில நேரங்களில் பயனற்றதாக மாறும்போது, சில உரிமையாளர்கள், அந்த நாய்களை தெருக்களில் அநாதையாக விட்டுச் செல்கின்றனர்.
இதன்காரணமாக தான் தெரு நாய்கள் கிடக்கின்றன. இவ்வாறு இருக்க, தென்கொரியா நாட்டில் ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கில் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர், நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் திடீரென காணாமல் போனதால், அதனை தேடி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், ஒருவரது வீட்டின் உள்ளே தேடி பார்த்தபோது, அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களின் சடலங்கள் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த அந்நாட்டு காவல்துறை, விசாரணை நடத்தி வந்தது.
அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது, அந்த நாய்களை கொன்று நபருக்கு 60 வயது இருக்குமாம். வயதான பிறகு பயன் ஏதும் கொடுக்க முடியாத வகையில் மாறும் நாய்களை, அதன் உரிமையாளர்கள், அந்த நபரிடம் விற்றுவிடுவார்களாம். அவர் அந்த நாய்களை வைத்துக் கொள்வதற்கு, அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொள்வாராம்.
ஆனால், அந்த நாய்களுக்கு உணவு எதுவும் வழங்காமல், சங்கிலியால் கட்டி வைத்துவிடுவாராம். இப்படியே செய்து, சுமார் 1000-க்கும் மேற்பட்ட நாய்களை கொன்றுள்ளார். இதையடுத்து, அந்த நபரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், உயிருடன் இருந்த மற்ற நாய்களை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.