கர்நாடக மாநிலத்தில், இன்று ஒரே கட்டமாக, 224 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்காக, பல்வேறு முக்கிய ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் செய்துக் கொடுத்துள்ளது.
அதன்படி, வாக்காளர்கள் எளிதில் தங்களது வாக்குகளை செலுத்த, 58 ஆயிரத்து 575 வாக்குப்பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மையங்களில், எந்தவொரு குழப்பமும் ஏற்படாமல் இருக்க, ஒரு லட்சம் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமைதியான முறையில், வாக்குப் பதிவு நடைபெறுவதற்காகவும், ஜனநாயக முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதற்காகவும், ஒன்றரை லட்சம் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, வாக்குப் பதிவு மையங்களில், கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மிகவும் பதட்டமான வாக்கு பதிவு மையங்களாக கருதப்படும் 3 ஆயிரத்து 223 இடங்களில், கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிங்க் பூத் என்று அழைக்கப்படும் பெண்களுக்கான சிறப்பு வாக்கு பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, வாக்குப் பதிவு, அமைதியான முறையிலும், ஜனநாயக அடிப்படையிலும், நடைபெற்று வருகிறது.