முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலில் உள்ள கஷங் நாலா பகுதியில் சட்லஜ் ஆற்றில் பயணித்த போது கார் கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது.
கார் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காரில் பயணித்த வெற்றி துரைசாமியின் நண்பரான கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 7 நாட்களாக நடந்து வரும் இந்த தேடுதல் வேட்டையில் அடுத்த கட்டமாக, வெற்றியின் உடல் எடை கொண்ட பொம்மை ஒன்றை ஆற்றில் வீசி, அது எந்தப் பாதையில் பயணிக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் மூலம் வெற்றியை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தான நீர்வீழ்ச்சியாக கருதப்படும் சட்லஜ் ஆற்றில் உள்ள கசாங் நலா என்ற நீர்வீழ்ச்சியில் சிக்கியவர்களில் வெகு சிலரது உடல் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளது சைதை துரைசாமியின் குடும்பத்தினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.