தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருபவர் மாணவி தீபிகா(16). தந்தை இல்லாத நிலையில் மாணவி தீபிகாவை தாய் துர்கா தான் கூலி வேலை செய்து கவனித்து வருகிறார். வாலிபால் போட்டியில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் மாணவி தீபிகா.
இந்நிலையில், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக தனலட்சுமி என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளார். அவர் தலைமையேற்ற பின்பு மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப மறுத்துள்ளார்.
இதையடுத்து தங்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்ட மாணவி தீபிகாவின் நடத்தை தலைமையாசிரியர் தனலட்சுமி நடத்தை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே உடலை எரித்து விட்டதாகவும் தெரிகிறது.
நேற்று திங்கள் கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த சகமாணவிகள் தீபிகா வராதது குறித்து விசாரித்தனர். அப்போது தீபிகா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து இன்று பகல் சுமார் 11 மணியளவில் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.