கொச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகளுக்கு, மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு கேரள மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, கொச்சி பல்கலைக்கழகம் அறிவித்ததைப் போல், அனைத்து பல்கலைக்கழகங்களிலும், மாதவிடாய் கால் விடுப்பு வழங்க, கேரள அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், 18 வயதை பூர்த்தி அடைந்த மாணவிகளுக்கு, மாதவிடாய் கால விடுப்பும், மகப்பேறு விடுப்பும் அளித்துள்ளதாக, கேரள அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “மீண்டும் ஒருமுறை இந்திய நாட்டிற்கே முன்னோடியாக கேரளம் விளங்கியுள்ளது.
கேரள உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், மாதவிடாய் கால விடுப்பும், மகப்பேறு கால் விடுப்பும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
75 சதவீத வருகையை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால், இந்த அறிவிப்பு வெளியான பிறகு, மாணவிகளுக்கு 73 சதவீத வருகை வைத்திருந்தால் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.