இப்போது வரை, தேசிய தகுதித் தேர்வை ( NET ) எழுதுவதற்கு முதுகலை பட்டத்துடன், 55 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், முனைவர் பட்டத்தை பெறுவதற்கான படிப்பையும், முதுகலை பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் படிக்க முடியும்.
இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், 4 வருடங்கள் வரை படிக்கக்கூடிய இளங்கலை படிப்பை முடிந்தவர்கள், இனிமேல் நேரடியாக NET தேர்வை எழுதலாம் என்றும், முனைவர் படிப்பை நேரடியாக படிக்கலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
ஆனால், அந்த 4 வருட பட்டப் படிப்பில், மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 4 வருடத்தில் என்ன பாடத்தை படித்தார்களோ, அதனை கவனத்தில் கொள்ளாமல், தங்களுக்கு எந்த பாடத்தில் PhD படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதில் படிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பட்டியிலத்தனவர்கள், பிற்படுத்தப்பட்டோர் ( கிரீமி லேயரில் இல்லாதவர்கள் ), மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்றவர்களுக்கு, மதிப்பெண்கள் வரம்புகள் வகைகளுக்கு ஏற்ற வகையில் தளர்த்தப்படும் என்றும், ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.