தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீண்ட கடற்கரை கொண்ட மாவட்டமாக விளங்கும் தூத்துக்குடியில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சிறிய ரக படகுகளைக்கொண்டும், நாட்டு படகுகளைக் கொண்டும் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடி அம்மாவாசை தினமான இன்று தூத்துகுடியில் கடல் உள் வாங்கி காணப்பட்டது. புதிய துறைமுகம் சாலையில் சுமார் 40 அடி தூரத்திற்கு மேல் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள படகுகள் தரை தட்டி நின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக கடல்சார் நிபுணர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் கடல்கள் சீற்றத்துடனும்,கடல் உள்வாங்கி காணப்படுவது இயல்பான ஒன்று தான், இதனை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர். தூத்துக்குடியில் திடீரென கடல் உள் வாங்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.