டெல்லியில் வெப்பத்திற்கு மத்தியில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நீரை வீணடிக்காமல் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளையும் மாநில நீர்வளத்துறை விதித்துள்ளது.
இந்நிலையில், இச்சமயத்தில் பாஜக அரசியல் செய்யாமல் மக்களுக்கு நிவாரணம் கிடைக்க ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்மென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதில், இம்முறை நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருவதால், நாடு முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, டெல்லியில் அதிகபட்சமாக 7,438 மெகாவாட் மின்சாரத் தேவை இருந்தது. இந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மின்சாரத்தின் உச்ச தேவை 8,302 மெகாவாட்டையை எட்டியுள்ளது. ஆனால் இதையும் மீறி டெல்லியில் மின்சாரம் கட்டுக்குள் உள்ளது, மற்ற மாநிலங்களைப் போல மின்வெட்டு இல்லை.
ஆனால், கடும் வெப்பத்தில் தண்ணீரின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தண்ணீரும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தேவை வெகுவாக அதிகரித்து வரத்து குறைந்துள்ளது. இதற்கு நாம் அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும். பாஜக நண்பர்கள் எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை நான் காண்கிறேன். இதனால் பிரச்னை தீர்ந்துவிடாது.
இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல், அனைவரும் ஒன்றிணைந்து டெல்லி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைவரையும் கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன். பாஜக தனது ஹரியானா மற்றும் உ.பி. அரசுகளுடன் பேசி, டெல்லிக்கு ஒரு மாதம் தண்ணீர் கொடுத்தால், பாஜகவின் இந்த நடவடிக்கையை டெல்லி மக்கள் பெரிதும் பாராட்டுவார்கள். இத்தகைய கடுமையான வெப்பம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.