ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீது கடந்த நவ.10-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று தெரிவித்தது.
பின்னர் தமிழக அரசின் மனுவுக்கு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கடந்த 18ம் தேதி கூட்டப்பட்டு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (நவ.20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அந்த மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததன் மூலம் அரசை ஆளுநர் முடக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்த பிறகும் ஆளுநர் ஆர்.என். ரவி, மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரா என கேள்வி எழுப்பி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.