தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் (மார்ச் 12) சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வேண்டும்” என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 4-ம் தேதி எஸ்பிஐ வங்கி மனு தாக்கல் செய்திருந்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் எஸ்பிஐ, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்காத நிலையில், அந்த வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதற்கிடையே, கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த மனு இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. எஸ்பிஐ வங்கி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்பிஐ சமர்ப்பிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும்.” என்று கூறினர்.