பெண்களுக்கான டெல்லி கமிஷன் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்.பியுமானவர் ஸ்வாதி மலிவால். இவர் கடந்த 13-ஆம் தேதி அன்று, அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, அவர் மீது அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பீபவ் குமார், தாக்குதல் நடத்தியதாக, பரபரப்பு புகார் எழுந்தது. இதையடுத்து, ஸ்வாதி மலிவால், காவல்துறையில் புகார் அளித்தார். இந்த சம்பவம், டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஸ்வாதி மலிவால் தனது எக்ஸ் பக்கத்தில், பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நேற்றில் இருந்து, ஊழல் புகார் தொடர்பாக, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி அமைச்சர்கள் பொய்யை பரப்பி வருகின்றனர்” என்று கூறினார்.
மேலும், என் மீது பதிவு செய்யப்பட்டதாக, ஆம் ஆத்மி தலைவர்கள் பேசும் வழக்கு, 8 வருடங்களுக்கு முன்பு, 2016-ஆம் ஆண்டு அன்று, பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கு பிறகு தான், பெண்களுக்கான டெல்லி கமிஷனின் தலைவராக, முதலமைச்சரும், துணை நிலை ஆளுநரும் என்னை இரண்டு முறை நியமித்திருந்தார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து, “இது ஒரு பொய்யான வழக்கு. இந்த வழக்கில் எந்தவித சட்டவிரோத பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று நீதிமன்றம் ஒத்துக்கொண்டுவிட்டது. ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை பொறுத்தவரை, பீபவர் குமார் மீது புகார் அளிப்பதற்கு முன்பு வரை, நான் ஒரு பெண் சிங்கம். ஆனால், இன்று நான் ஒரு பாஜக ஏஜெண்ட் ஆக மாறிவிட்டேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “ஒட்டுமொத்த ட்ரோல் ஆர்மியும், எனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், நான் உண்மையை பேசிவிட்டேன்” என்று கூறினார். இறுதியாக, என்னுடைய உறவினர்களின் கார் நம்பர்களை ட்வீட் செய்வதன் மூலமாக, அவர்களது வாழ்க்கையை ஆம் ஆத்மி தலைவர்கள் ஆபத்தில் தள்ளுகிறார்கள் என்றும், பொய் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்றும் சூளுரைத்தார்.