இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட் 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சார்லஸ் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ரோவ்மன் பாவெல் 17 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 36 (32) ரன்களும், ரூதர்போர்டு 28 (15) ரன்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 25 (22) ரன்கள் எடுத்து வெளியேற, மொயீன் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் பிலிப் சால்ட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ருத்ர தாண்டவம் ஆடினர். இவர்களின் விளாசலில் இங்கிலாந்து அணி 18வது ஓவரில், 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சால்ட் 47 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
பேர்ஸ்டோவ் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் விளாசினார். ரஸ்டன் சேஸ் மற்றும் ரஸல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.