பாகுபலி படத்தின் முதல் பாகத்தில், பாகுபலி கதாபாத்திரம் ( பிரபாஸ் ), அவந்திகா ( தமன்னா ) கதாபாத்திரத்திடம் சண்டையிடுவார். அப்போது, அவளது உடையை மாற்றி, அந்த பெண்ணுக்கு பெண்மையை உணர்த்துவார்.
இதன்மூலம், அவந்திகா பாகுபலியை காதலிப்பது போலவும், இருவரும் உடலுறவு கொள்வது போலவும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இது படம் ரிலீசான சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் நிர்பந்திக்கிறாரா? என்று கேள்வி எழுந்தது. மேலும், இது அவந்திகாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என்றும் சிலர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த விமர்சனத்திற்கு, இயக்குநர் ராஜமௌலி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “சிவகாமி, தேவசேனா மாதிரியான அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள் பாகுபலி படத்தில் இருந்தாலும், பெண்களை அவ்வாறு காட்டியதற்காக, சிலர் விமர்சனம் செய்திருந்தார்கள். அந்த சூழலை சரியாக புரிந்துக்கொள்ள முடியாததில் இருந்து தான் இந்த விமர்சனம் வந்துள்ளது என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
மேலும், “அவந்திகா ஒரு வீராங்கனை. ஆனால், அவள் அப்படி இருக்க விரும்பவில்லை. அவள் ஒரு அழகான பெண்ணாக இருக்க தான் ஆசைப்படுகிறாள்.
ஒரு அம்பால் பாகுபலி காயம் அடைந்திருந்த போதிலும், அவன் அவந்திகாவின் அழகில் தான் கவனம் செலுத்துகிறான். இதன்மூலம், அவள் பெண்மையை வெளிப்படுத்தியது காட்சிப்படுத்தப்பட்டது” என்று கூறினார்.
இவரது இந்த விளக்கத்திற்கு பிறகு, மீண்டும் இந்த காட்சி தொடர்பான விவாதம், இணையத்தில் எழுந்துள்ளது. ஒருசிலர், அவரது கலை திறனை பாராட்டி வருகின்றனர். மறுபக்கம், வேறுசிலர், இப்போதும் அந்த காட்சி தவறாக தான் உள்ளது என்று ராஜமௌலியை விமர்சித்து வருகின்றனர்.