சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையத்தில் அமிர்தராஜ், மணிபாரதி ஆகியோர் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் படப்பை, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசியுள்ளார். இதை பார்த்த காவலர்கள் இருவரும் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறி மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர்.
பிறகு அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவதாக காவலர்கள் பேரம் பேசியுள்ளனர். ஆனால் தங்களிடம் 4 ஆயிரம் ரூபாய் தான் உள்ளது என அவர்கள் கூறியதால் ஜி.பே மூலம் லஞ்சமாக பெற்றுவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து காவலர்கள் இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் காவலர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காவலர்களே ஜிபே மூலம் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.