நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வருவதற்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு திரைப்படத்திற்கு லாபம் வேண்டும் என்றால், அது திரையரங்குகளில் நன்றாக ஓடினால் மட்டும் போதும்.
அதன்பிறகு, தயாரிப்பாளருக்கு வேறெந்த லாபமும் கிடைக்காது. ஆனால், தற்போது, திரையரங்க உரிமை, சேட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை, ஆடியோ உரிமை என்று பல்வேறு வகைகளில் லாபம் கிடைக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஓடிடி உரிமையில் தான், படத்தின் பாதி பட்ஜெட் கிடைத்துவிடுகிறது. இதனால், திரையரங்குகளில் திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில், ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உதயம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரையரங்குகள் மூடும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கும், திரையரங்குகளின் அவல நிலையை மாற்றுவதற்கும், திரையரங்க உரிமையாளர்கள் நலச்சங்கம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, திருப்பூர் சுப்பிரமணியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகும் கால அவகாசத்தை 8 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 8 சதவீத லோக்கல் வரி விதிப்பிற்கு தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் திரையரங்கு அதிபர்களின் இந்த கோரிக்கையை தயாரிப்பாளர்கள் காது கொடுத்து கேட்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..