Connect with us

Raj News Tamil

தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகம்

தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று என்னிடமே அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியுள்ளார் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநாட்டுக்காக வந்துள்ளேன். இந்தக் கொள்கை எல்லா மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி அறையில் இருந்து உலக அளவுக்கு மாணவர்களை உயர்த்துவதற்காகவே இந்தக் கொள்கை. ஆனால் தமிழகத்தில் அது அரசியல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது வேதனை.

நீட்டிலும் சரி, புதிய கல்விக் கொள்கையிலும் சரி மாணவர்கள் சிறப்பாக செயலாற்றத் தயாராக இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். வேண்டாதவற்றில் தலையிட்டு, வேண்டியதை விட்டு விடுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுகு என்றார்கள். ஆனால் இந்த கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்து தான் இது என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து தற்போது நீட்டை பற்றித் தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கினாலும் பிரச்சிசனை இல்லை. மதுரை எய்ம்ஸ் நிர்வாக ரீதியாக தற்போது நடைபெற்று வருகிறது. தம்பி உதயநிதியிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் முட்டையை தூக்கி காண்பித்தீர்கள், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 1,200 முட்டைகள் அழுகி இருந்ததாம். அதனால் அங்கு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை. இதை முதலில் பாருங்கள்.

தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை மன வருத்தமாக இருக்கிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். கண்டதேவி கோயில் தேரோட்டத்துக்கு துணை ராணுவத்தை வைத்து நாங்கள் நடத்தவா என்று நீதிமன்றம் கேட்கிறது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்கப் பாருங்கள். 13 மொழிகளில் பேசுவதெல்லாம் இருக்கட்டும் முதலில் மக்களுக்கான மொழியில் பேசி பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் நடத்த ஏன் அனுமதி மறுக்கிறீர்கள். உங்களால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லையா. தமிழ் தான் எங்களுக்கு, மற்ற மொழிகள் வேண்டாம் என்று கூறிவிட்டு இன்று எனது பேட்டி 13 மொழிகளில் ஒளிபரப்பாகிறது என்று முதல்வர் கூறுகிறார். வயிற்று பிழைப்புக்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக்கூடாது ஆனால் அரசியல் பிழைப்புக்காக மட்டும் மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம். மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதால் தமிழ் மொழி பின்னடையப் போவதில்லை.

ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேச வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் 167-வது பிரிவின்படி மாநிலத்தில் தேவைப்படும்போது எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஆளுநரிடம் சென்று விவாதிக்க வேண்டும். ஆளுநருடன் நட்புறவுடன் கூடிய அணுகுமுறையை தமிழக அரசு மேற்கொள்கிறதா என்றால் இல்லை. ஆளுநர் விருந்துக்கு அழைத்தால் கூட ஏன் புறக்கணிக்க வேண்டும், இதுபோன்ற நேரங்களில் தான் பேச முடியும். புதுச்சேரியில் கூட காங்கிரஸ், திமுக ஆளுநர் அழைப்புகளை ஏற்று விருந்துக்கு வரமாட்டோம் என்று சொல்வது நல்ல பழக்கம் இல்லை. தமிழகத்தில் இந்தப் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் கூட செய்தியாகிறது.

இன்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றுள்ளார், மத்திய அமைச்சர் ஜெயசங்கர் பலமுறை இலங்கை சென்று வந்தார். நாங்கள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதற்கு பாரதத்திலிருந்து வந்த உதவிதான் காரணம் என்று இலங்கை பிரதமர் சொல்லி இருக்கிறார். தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று என்னிடமே அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியுள்ளார்.

ஆனால் இவர்களின் (காங்கிரஸின்) ஆட்சியின் போது தான் அங்கு படுகொலைகள் நடைபெற்றது. மத்தியில் இருந்து எத்தனை அமைச்சர்கள் அங்கு சென்றார்கள். இந்தக் கூட்டணியில் பலனடைவோம் என்று சொல்கிறார்கள் ஆனால் காவேரி நீரை கூட நட்புணர்ச்சியோடு பெற்றுத்தர முடியவில்லை. இந்தக் கூட்டணி மத்தியில் இருந்த போது தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்கள் எத்தனை முறை டெல்லி சென்று தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள் என்று சொன்னார்கள் ஆட்சிக்கு வந்தபோது எதையும் செய்யவில்லை” என்றார்.

More in தமிழகம்

To Top