இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டினார்.
‘என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிந்தாமணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கினார். இதனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அவிநாசி சிந்தாமணியில் தொடங்கி அவிநாசி சேவூர் சாலை,கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரதவீதிகள் கோவை பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாகபுதிய பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது: ஊழல் இல்லாத தமிழகத்தை பிரதமா் மோடி உருவாக்க நினைக்கிறார். இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.
அவிநாசியில் 24 படுக்கைகளுடன்தான் மருத்துவமனை இருந்தது. தற்போது திருப்பூா், அவிநாசி மக்கள் பயன்பெறும் வகையில் திருமுருகன்பூண்டியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் பல லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனா். ஊழலும், ஏழ்மையும் ஒழிய பாஜகவுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.