ஜாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் 4ஆம் இடத்தில் தமிழ்நாடு..!

தமிழ்நாடு இந்திய அளவில் ஜாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் 4ஆம் இடத்தில் உள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டை குவளை முறையினை ஒழிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டிய சாதிய வெறியர்களை தமிழக அரசும் காவல் துறையினரும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு “தமிழக அரசே காவல் துறையே வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் கழிவு கலந்திட்ட கும்பலை உடனடியாக கைது செய் கைது செய்” என கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் : புதுக்கோட்டை வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல். சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

கழிவு கலக்கப்பட்ட தொட்டியயை இடிக்க வேண்டும். அந்த மக்களுக்கு என தனி தொட்டி அமைக்ககூடாது. இரட்டை குவளை போல், இரட்டை தண்ணீர் தொட்டி, இரட்டை சுடுகாடு போன்றவை கூடாது என கோரிக்கை வைத்தார்.

இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் ஜாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் 4ஆம் இடத்தில் உள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டை குவளை முறையினை ஒழிக்க வேண்டும் என்றார்.

மத்திய மாநில பட்டியலின ஆணையம் உள்ளது. இவை இதுவரை புதுகோட்டை பகுதிக்கு செல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. முதல்வரோ, காவல்துறையோ சொன்னால் தான் அந்த பகுதிக்கு போக வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. களத்தில் மக்களுக்காக உடனடியாக பணியாற்றி இருக்க வேண்டும் என கூறினார்.

யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது பிரச்சனை அல்ல, மனித குலத்திற்கே அவமானமான பிரச்சனை இது. இதில் மற்ற அரசியல் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தாது வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News