ஆந்திரா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று வெளியானது. இந்த தேர்தலில், தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி, 93 சதவீத இடங்களை கைப்பற்றி, அபார வெற்றி பெற்றது.
இதையொட்டி, இன்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், சிரஞ்சீவி, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர், கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஏற்கனவே மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா, மேடைக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜனை, கண்டிக்கும் தொனியில் பேசினார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், தமிழகத்தில் ஏற்பட்ட படுதோல்வியின் காரணமாக, மாநில பாஜக நிர்வாகிகள் இடையே, உட்கட்சி பூசல் இருப்பதாகவும், இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழிசை சௌந்தரராஜனை, செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, அமித்ஷா கண்டித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல், அங்கிருந்து அமைதியாக அவர் கிளம்பிச் சென்றார்.