உலக அளவில் உள்ள முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது, காலநிலை மாற்றம் தான். இதன்காரணமாக, பருவங்களுக்கு சம்பந்தமே இல்லாத சூழ்நிலைகள் நிலவி வருகிறது. மேலும், காட்டுத் தீ, நிலச்சரிவு, பெருமழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்கள், காலநிலை மாற்றத்தால் தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இருக்க, சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு, மாநாட்டை துவக்கி வைத்தார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலநிலை மாற்றம் குறித்து ஆராய்வதற்காக, மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான் என்றும், காலநிலை மாற்றம் குறித்து, கல்வித்துறைமூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திராவிட மாடல் அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வயநாடு நிலச்சரிவுக்கும், திருவண்ணாமலை மண்சரிவுக்கும் காலநிலை மாற்றத்தையே காரணமாக சொல்ல வேண்டும் என்றும், இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.