மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. இவர் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் மூர்த்திக்கு ஆதரவாக அதே பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பள்ளி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடரும் சூழலில் மாணவ- மாணவிகளிடமும் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததும், ஆசிரியருக்கு ஆதரவாக மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருவதும் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.