டெல்லி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமானது.
டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் மெட்ரோ காவல் நிலையத்தில் நேற்று இரவு 12:45 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து உடனடியாக டெல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென காவல் நிலையம் முழுவதும் பரவியது.
இதில் காவல் நிலையத்தில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இங்கு மெட்ரோ துணை ஆணையர் அலுவலகமும் உள்ளது.
இந்த விபத்தில் எந்த எவ்வித உயிரிழப்புகளோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் காவல் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.