ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது.
ஜி20 உச்சி மாநாட்டில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை இணைக்கும் நிகழ்வு நடந்தது. ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததால் ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக ஜி-20 கூட்டமைப்பு மிகப் பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது.
முன்னதாக ஜி-20 மாநாட்டுக்கு வருகைதந்த ஆப்பிரிக்க யூனியனின் பிரதிநிதியை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவி பாரத் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றது கவனம் பெற்றது.
மாநாடு தொடங்கியவுடன் மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கை முன்னர் பாரத் என்று பெயர்ப் பலகை இருந்தது கவனம் பெற்றுள்ளது.