சென்னையில் பயணியின் விரலை ஆட்டோ ஓட்டுநர் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ராமு என்பவர் திருவான்மியூர் பணி முடித்து வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அப்போது, ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் உள்ள கம்பியில் அவர் காலை வைத்துள்ளார். இதற்கு ஓட்டோ ஓட்டுநர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் ஆட்டோ இருந்த கம்பியால் ராமுவை தாக்கியுள்ளார். மேலும் ஆத்திரம் தீராத சந்தானம், ராமுவின் கை சுண்டு விரலை கடித்து துப்பி உள்ளார். இந்நிலையில் ரத்தம் வடிய நின்று கொண்டிருந்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவருடைய கை விரலை ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சந்தானத்தை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.